பாடப்பிரிவை தேர்வு செய்யும் முன்..
பொறியியலில் சேர்ந்து படித்து இரண்டாம் ஆண்டில் படிப்பை கைவிட்டுவிட்டேன். எனக்கு அறிவியலில் தான் ஆர்வம் அதிகம் என்று தெரிந்து கொண்டேன் என வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
பொறியியலை தேர்வு செய்துவிட்டு, அறிவியலில் ஆர்வம் உள்ளது என்று கண்டறிந்தவர், கடைசியாக இருப்பதோ வழக்கறிஞராக. சில மாணவர்களுக்கு, தாங்கள் தேர்வு செய்திருக்கும் பாடப்பிரிவு தங்களுக்கு ஏற்றது இல்லை என்று தெரிந்ததும், அதனை மாற்றிக் கொள்ள வழி உள்ளது. ஆனால் பலரும், அது தெரிந்தும், வேறு வழியில்லாமல், அப்படிப்பிலேயே தொடரும் நிலை உள்ளது. இதனால் தாங்கள் தேர்வு செய்த படிப்பில் மிளிரவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கின்றனர்.
ஒரு சிலரே, தங்களுக்கு ஆர்வமுள்ள பாடப்பிரிவினை முதல் முறையிலேயே சரியாக தேர்வு செய்துவிடுகின்றனர்.
பல மாணவர்கள், பெற்றோரின் வற்புறுத்துதலுக்காவும், நண்பர்கள் எடுக்கும் பாடப்பிரிவை எடுப்பதற்காகவும், உறவினர்கள் சொன்னதற்காகவும், ஏதோ ஒரு பாடப்பிரிவை எடுத்துவிடுகின்றனர்.
பிறகுதான் தெரிகிறது, அந்த பாடப்பிரிவு, அவர்களது ஆர்வத்திற்கு நேர் எதிரானது என்று. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகின்றனர். இந்த நிலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவு உங்களுக்கு ஏற்றதா என்பதை முதலில் தீர்மானியுங்கள்.
பாடப்பிரிவும், கல்லூரியும்
மாணவர்கள், எந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பதைவிட, எந்த கல்லூரியில் படிப்பது என்பதையும் முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். எந்த ருசியான உணவாக இருந்தாலும், அதனை பரிமாறும் விதம் என்று ஒன்று உண்டு அல்லவா? அதுபோலத்தான் கல்லூரியும். சிறந்த கல்லூரியில், படிக்கும் மாணவர்களது எதிர்காலமும் சிறந்த வகையில் அமையும். நண்பர்கள் வட்டம் நன்றாக அமையும். நண்பர்கள் நன்றாக அமைவதே, வாழ்க்கையின் பல வெற்றிகளுக்கு உதவும்.
சில கல்லூரிகளில் படித்தோம் என்று சொன்னாலே அது பெருமைப்படத்தக்க விஷயமாக இருக்கிறது என்றால், கல்லூரியின் தரம் எந்த அளவிற்கு முக்கியமானது என்று கருத்தில் கொள்ளுங்கள்.
அதே சமயம், மிகச் சிறந்த கல்லூரி என்பதால், உங்களுக்குப் பிடிக்காத பாடப்பிரிவில் சேர்ந்துவிடாதீர்கள். என்னதான் சிறந்த கல்லூரியாக இருந்தாலும், எண்களேப் பிடிக்காத மாணவருக்கு கணிதத்தை புரிய வைக்க முடியாது.
எனவே, உங்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை பாருங்கள். பாடத்தை படிக்காமல், புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத்தான் புரிந்து கொள்ள முடியும். பிளஸ் 2 முடிக்கும் போது ஓரளவிற்கு உங்களுக்கு ஆர்வம் உள்ள துறை என்ன என்பது தெரிந்திருக்கும். அல்லது எந்த விஷயத்தில் நீங்கள் சிறப்பாக இயங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். அதனை நோக்கி உங்கள் பயணம் அமையட்டும்.
உணர்ச்சிக்கு அடிமையாகாதீர்கள்
எப்போதும் ஒரு முடிவை எடுக்கும் முன்பு, மூளை சொல்வதைக் கேளுங்கள். உணர்ச்சி வயப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் தவறாகவே முடியும். உங்கள் வீட்டில் எல்லோருமே டாக்டர்கள்தான். நானும் டாக்டருக்குப் படித்தால்தான் மரியாதை என்ற உணர்ச்சி வேகத்தில் மருத்துவம் படிக்க முடிவு செய்திருந்தால் அது நிச்சயம் உங்களை பாதிக்கும் முடிவாகவே இருக்கும். ஒருவேளை உங்களுக்கு கம்ப்யூட்டர் துறையில் ஆர்வமிருந்து, நீங்கள் மருத்துவத்தை தேர்வு செய்தால், உங்கள் படிப்பு எப்படி அமையும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
உலோகம் பற்றியோ, அதனைப் பயன்படுத்துவது பற்றியோ எதுவும் தெரியாமல், நண்பர்கள் எல்லோரும் ஒரே படிப்பை தேர்வு செய்யலாம் என்று நட்பு உணர்ச்சிக்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எடுத்தால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும்.
ஆர்வம்தான் முக்கியம்
உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று பாருங்கள். அது எழுதுவதாகவோ, இசை, ஓவியம், வடிவமைத்தல், அறிவியல், கம்ப்யூட்டர் என எதுவாகவும் இருக்கலாம். அதற்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்து படியுங்கள். மற்றவர்களது பேச்சுகளுக்கு காது கொடுக்க ஆரம்பித்தால் உங்கள் ஆர்வம் தொலைந்து போகும். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்தால்தான், உங்களால் பிரகாசிக்க முடியுமேத் தவிர, மற்றவர்களது ஆசைக்காகவோ, ஆலோசனைக்காகவோ படித்தால் அது சரிவராது.
மற்றவர்களுடன் இனிமையாக பழகுதல் அல்லது பேச்சாற்றல் மிக்கவராக நீங்கள் உணர்ந்தால், தொலைத்தொடர்பு, செய்தி சேகரிப்பு, மனித வள மேம்பாட்டுத் துறை போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். எப்போதும் எதையாவது எழுதுவதும், கவிதை, கட்டுரை போன்றவற்றை படிப்பதிலும் ஆர்வம் இருப்பின், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியப் படிப்புகளில் புலமை பெற்று பேராசியராகலாம்.
திரைப்படம் சார்ந்த ஆர்வம் இருக்கும் மாணவர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் மாணவரே வெற்றியாளராகிறார். இதில் ஒன்றையாவது வீணடித்துவிட்டாலும் வாழ்க்கை வீணாகிவிடும். சரியாக, கவனமாக பாடப்பிரிவை தேர்வு செய்யுங்கள். வாழ்த்துகள்.
No comments:
Post a Comment